வெள்ளி, 22 ஜூன், 2012

தளபதி


இது சிவகாமியின் சபதத்தில் வரும் தளபதி பரஞ்சோதி ... நீங்க இளைய தளபதியையோ அல்லது திமுக தளபதியையோ  நினைத்து வந்திருப்பீர்கள் என்று தெரியும் ... வந்ததுதான் வந்துட்டீங்க அப்படி ஒரு எட்டு என்னன்னு படிச்சிட்டு  போங்க பாவம் .. அவங்க நம்ம வரலாற்றை பெருமையாக்க    எவ்வளவு கஷ்ட்டப்பட்டிருப்பாங்க ........

முரட்டு சுபாவம் கொண்டு வேலை வெட்டிக்கு செல்லாமல் பலரிடம் சண்டையிட்டு  கொண்டிருந்த தன் மகனை கல்வி கற்பதற்காக தலைநகர் காஞ்சி அனுப்புகிறார் ஒரு தாய். பிற்காலத்தில் அவனே பல்லவர்களின் தளபதி  பதவியை அடைந்து வீரப்போர் புரிந்து பல்லவ அரசை காப்பாற்ற போகிறான் என்பது அப்போது அவருக்கோ அல்லது நாவலை படிக்கும் வாசகர்களுக்கோ தெரியாது. மிகவும் எளிமையாக ஆரம்பிக்கும் பரஞ்சோதியின் வாழ்வில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் ஏற்பட்டு பல்லவ மன்னன் மகேந்திர பல்லவனின் நம்பிக்கைக்கு உரியவனாகி தளபதி பதவி அடைவது வரை நடைபெறும் சம்பங்கள் மிகவும் எதிர்பாராதவைகளாகும்.

முதலில் பரஞ்சோதியின் வீரம் வெளிப்படும் விதமாக நாவலின் ஆரம்பத்தில் கதையின் நாயகி சிவகாமியும் அவரது தந்தை ஆயனரும் பல்லக்கில் செல்லும் பொது மதம் கொண்ட யானை ஒன்று அவர்களை தாக்க வர சற்றும் எதிர்பாரா விதமாக கையில் இருந்த வேலை அதன் மீது எறிந்த உடன் அது வலியால் எதிர் திசை நோக்கி ஓட பல்லக்கில் வந்தவர்கள் காப்பாற்றப்பட்டனர். இந்த நிகழ்ச்சியின் பல்லவ மண்ணுக்கு ஒரு யோசனை தோன்றியதாம். அதாவது கிட்டத்தட்ட பதினாறாயிரம் யானைகளை அடங்கிய  யானைப்படையை கொண்ட வாதாபி மன்னன் புலிகேசியின் படைகள் தலைநகர் கஞ்சியை முற்றுகையிட தயாராக இருக்கிறது, அதை முறியடிக்க பல்லவ மன்னனிடம் படைபலம் இல்லை, இதை எவ்வாறு முறியடிப்பது என்று யோசித்து கொண்டிருக்கையில்தான் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன் மூலம் புலிகேசியின் சாராயம் கொடுக்கப்பெற்று மதம் கொள்ள செய்யப்பெற்ற யானைகள்  கோட்டையை தாக்க  வரும் போது, அவற்றின் மீது வேலை எறிந்தால் அவைகள் திரும்பி ஓடி அவர்களின் படைகளையே நாசமாக்கும் என்பதை பல்ல மன்னன் யூகித்துக் கொண்டார். மேலும் சமயோசிதமாக மற்றும்  பயம் இல்லாமல் யானையின் மீது  வேலை எறிந்த  பரஞ்சோதியின் வீரமும் அவருக்கு பிடித்து விட்டது.அவரை சந்தித்து தன்னுடைய தளபதியாக்கி கொள்ள பல்லவ மன்னன் முயலுகையில் புலிகேசியின் அந்தரங்க ஒற்றன் நாகநந்தி அடிகள் என்னும் புத்த பிக்குவின் சூழ்ச்சியில் சிக்கி கொண்டு, அவன் கொடுத்த ஓலையை எடுத்துக் கொண்டு புலிகேசியின் படையிடமே சிக்கி கொள்கிறார் பரஞ்சோதி. மொழி பிரச்சினையால் அவர்கள் விசாரணையிலும் எதுவும் சொல்ல முடியாமல்  தவிக்கிறார். அப்போது அங்கு மாறுவேடத்தில் வரும் பல்லவ மன்னன் பரஞ்சோதியை மீட்டு அவரி தப்புவித்து கொண்டு பல்ல படை முகாமுக்கு கொண்டு செல்கிறார் அவர் மன்னர் என்று தெரிவிக்காமலே. அதன் பிறகு எட்டு மாதங்கள் பல்லர் படை முகாமில் தங்கி வாதாபி படைகளை நகரவிடாமல் வீரப்போர் புரிந்து கொண்டிருக்கிறார் பரஞ்சோதி.

இதற்கிடையில் மற்றொரு பக்கத்தில் இருந்து கங்க மன்னன் காஞ்சியை முற்றுகையிட வந்து கொண்டு இருக்கிறான் என்ற செய்தி எட்ட, மன்னர் பரஞ்சோதியை இளவரசர் மாமல்லனின் துணைக்கு அனுப்பி வைக்கிறார். தந்தை தன்னை போர்களத்திற்கு வரவேண்டாம், கோட்டையிலே இருக்க வேணும் என்று கூறியதிலிருந்து மிகவும் துயரத்துடன் இருக்கும் மாமல்லனோ மிகவும் உற்சாகமாக படைகளை திரட்டி கொண்டு கங்க மன்னனுடன் மிகச்சிறய படையுடன்  போர் புரிய கிளம்புகின்றனர். வீரப்போர் புரிந்து கங்க மன்னனை ஓட ஓட விரட்டியடிகின்றனர்.

இது வரையில் நான் படித்தது அவ்வளவுதான்... இன்னும் பாதிக்கு மேல் படிக்க வேண்டி இருக்கிறது.... வாதாபி படைகள் காஞ்சியை முற்றுகை இட்டனவா? அல்லது பல்லவ மன்னன் அதை முறியடித்தானா   என்பது படிக்க படிக்க தான் தெரியும்.  அதில்  தளபதியாரின் பங்கு என்ன என்பது பற்றி பிறகு வரும் பதிவில் கூறுகிறேன்

திங்கள், 18 ஜூன், 2012

சிவகாமியின் சபதம் - பொன்னியின் செல்வன் ஓர் ஒப்பீடு


எப்படியோ ஒருவழியாக கடந்த 10  மாதங்களாக  பொன்னியின் செல்வன் நாவலை  படித்து முடித்து விட்டேன். அதனால் ஏற்பட்ட ஒரு ஆர்வம் கல்கியின் மற்றுமொரு சரித்திர நாவலான சிவகாமியின் சபதம் நாவலை படிக்க தூண்டியது விளைவு பெங்களூரில் இருந்தாலும் உடுமலை.காம் இணையதளத்தில் முன்பதிவு  செய்து VPP  மூலம் புத்தகத்தை பெற்று படிக்கவும் ஆரம்பித்துவிட்டேன்.சும்மா சொல்லகூடாது உடுமலை.காம் புத்தகத்தை சொன்னபடியே அனுப்பி விட்டார்கள் ... எனக்குதான் அந்த அளவிற்கு நம்பிக்கை இல்லை ... அதற்காக உடுமலை.காம் இணையதளத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். சரி இப்ப என்ன சொல்ல வரன்றிங்களா இதோ சொல்லிடறேன்...

பொன்னியின் செல்வன் நாவலைப்போல சிவகாமியின் சபதமும் உண்மையான  சரித்திர சம்பவத்தை எடுத்துக்கொண்டு அதில் சில கற்பனையான கதாபாத்திரங்களையும் சம்பவங்களையும் சேர்த்து புனையபட்ட நாவலாகும். ஆனால் அதன் சரித்திர நிகழ்வுகளை கொஞ்சமும் மிகைப்படுத்தியோ அல்லது கற்பனையான சம்பவங்களை சேர்த்தோ எழுதவில்லை என்று திரு.கல்கி அவர்களே கூறுகிறார்கள். பொன்னியின் செல்வன் சோழர்களின் பொற்காலங்களில் ஒன்றான இராஜராஜனின் வாழ்க்கை சம்பங்களை அடிப்படையாக கொண்டது. சிவகாமியின் சபதமோ பல்லவர்களின் வரலாற்றில் மறக்க முடியாத மறைக்க முடியாத புகழுடன் விளங்கிய மன்னனான மகேந்திர பல்லவன் மற்றும் அவனுடைய மகன் மாமல்லன் என்கின்ற நரசிம்ம வர்மன் ஆகியவர்களின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படியாக  கொண்டது.


இராஜராஜனின் காலத்தில் பல்லவர்கள் சோழர்களின் ஆளுமைக்குட்பட்டு  அவர்களுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னர்களாக வாழ்ந்து வந்தனர். மகேந்திர பல்லவன் காலத்தில் சோழர்கள் குறுநில மன்னர்களாகி அவர்களுக்கு கப்பம் கட்டி வாழ்ந்து வந்தனர். இருவரது காலத்திலும் காலத்தால் அழியாத கோவில்களையும் சிற்பங்களையும் உருவாகினார்கள். மகேந்திர வர்மன் மாமல்லபுரம்  சிற்பங்கள் மற்றும் கோவில்களையும், இராஜராஜன் தஞ்சை பெரிய கோவிலையும் எழுப்பினார்கள்.


பொன்னியின் செல்வன்  நாவலின் வில்லியான  நந்தினியை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும்  சிவகாமியின் சபதமோ சிவகாமியை சுற்றி நகரும். இரண்டு  நாவல்களின் காலத்திலும் புத்தமதம் பிரதானமாக  இருந்து பிறகு சைவ மதம் தழைக்க ஆரம்பித்த தருணம்
இந்த இரு சரித்திர நாவல்களுக்கும் உள்ள ஒரு வேற்றுமை என்னவெனில் பொன்னியின் செல்வனோ ஆட்சியை  பிடிக்க   உள் நாட்டில் ஏற்படும் கலகத்தை  முறியடிக்கும் விதமாக இருக்கும் மாறாக சிவகாமியின் சபதம் எதிரி நாட்டின் படையெடுப்பில் கவர்ந்து சென்ற பெண்ணை திரும்பவும் கொண்டுவரும் விதமாக முடிக்கப்பட்டிருக்கும்.பொன்னியின்  செல்வனோ அல்லது சிவகாமின் சபதமோ படிக்கும் பொது விறுவிறுப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லை, படிக்க படிக்க ஆவலை  தூண்டும் நாவல்களாகும்.

சிவகாமின் சபதம் பற்றி மேலும் சில பதிகளை எழுதலாம் என்ற எண்ணம் இருக்கிறது. இப்போதுதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன் போகப்போக மேலும் சில பதிவுகள் இது தொடர்பாக வெளிவரும்.