வெள்ளி, 26 அக்டோபர், 2012

கங்கை கொண்ட சோழபுரம் - பிரம்மாண்டம்


சில மாதங்களுக்கு முன்புதான் கங்கை கொண்ட சோழபுரம் கோவிலை பற்றி தெரிந்து கொண்டேன். அதுவும் இந்த கோவில் தஞ்சை பெரியகோவிலின் பிரதியை போன்றே இருக்கும் என்றும் தெரிந்து கொண்டேன். இருந்தாலும் அந்த கோவிலை பற்றி மனதில் அவ்வளவாக ஒரு ஆர்வம் ஏற்படவில்லை. கங்கை கொண்ட சோழபுரம் கோவில் உலக பாரம்பரிய சின்னம் என்று தெரிந்தவுடன், எப்படியாவது சென்று பார்த்துவிட முடிவு செய்தேன்.இது என் ஊரில்(பண்ருட்டி அருகில் )  இருந்து கிட்டத்தட்ட 60  கிலோ மீட்டருக்குள் இருக்கிறது என்பதால் விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் போது சென்று பார்த்து விடுவது என தீர்மானித்திருந்தேன். அதன் படி ஒரு விடுமுறை தினத்தன்று சென்னையில் இருந்து ஜெயம்கொண்டம் செல்லும் பேருந்தில் ஏறி, ஜெயம்கொண்டம் கூட்டு ரோட்டில் இறங்கினேன். அந்த கூட்டு ரோட்டை சுற்றிலும் சில கடைகள் மற்றும் ஆட்டோக்கள் இருந்தன. அருகில் இருந்தவரிடம் இங்கிருந்து எப்படி கோவிலுக்கு செல்வது என்று கேட்டபோது, இந்த வழியாக செல்லும் டவுன் பஸ்ஸில் சுமார் 2  கிலோ மீட்டர்கள் சென்றால் கோவில் அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது அங்கே இன்றங்கி கொள்ளுங்கள் என்றார். ஆர்வம் தாங்காமல் ஆட்டோ பிடித்து கோவிலை சென்றடைந்தேன்.

 கங்கை கொண்ட சோழபுரம் கோவிலை பார்த்து  நிச்சயம் பிரம்மித்து போனேன், அவ்வளவு பிரம்மாண்டம்.... தஞ்சை பெரிய கோவிலை விட பெரிய கோவில் இது ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் இருக்கும் சிலை நுட்பம் இந்த கோவிலில் இல்லை என்பதை இதன் பிரம்மாண்டம் மறைத்து விடுகிறது. தஞ்சை பெரிய கோவிலை கட்டிய முதலாம் ராஜராஜனின் மகன் முதலாம் இராஜேந்திரன் கட்டியது. தந்தையின் புகழுக்கு முன்னாள் நாம் காணமல் போய்விடக்கூடாது என்று கருதி இந்த கோவிலை அவர் எழுப்பி இருக்க கூடும். மறுமலர்ச்சி  திரைப்படத்தில் பார்க்கும் போது கூட இதன் பிரம்மாண்டம் தெரியவில்லை.
நான் சென்றது வார நாள் என்பதால் கூட்டம் அதிகம் இல்லை, சில வரலாற்று மாணவர்கள் மற்றும் சில சுற்றுலா பயணிகளும் வந்திருந்தனர். கோவிலுக்குள் நுழையும் போதே மிகப்பெரிய நந்தி சிவலிங்கத்தை நோக்கி அமர்திருப்பதை காண முடிகிறது. அதை அடுத்து விசாலமான மண்டபம். மண்டபத்தில் நான் கண்ட காட்சி என்னை மிகவும் ஆச்சர்யத்தை உண்டாக்கியது ஆம் ..... மண்டபத்தின் மேற்கூரையில் மீன் படம் கல்லால் பொறிக்கப் பட்டிருந்தது.
மண்டபத்தை அடுத்து மூலாஸ்தானத்தில் மூலவரான சிவபெருமான் சிவலிங்கமாக காட்சி தருகிறார். கோவிலை சுற்றிலும் பல சிறிய கோவில்கள் எழுப்பப்பட்டுள்ளன. பெரும்பான்மையான சிறு கோவில்கள் சரியாக பராமரிக்கப்படாமல் இருக்கிறது. கோவிலை சுற்றிலும் பல சோழர்கால எச்சங்கள் சுற்றிலும் வேலி அமைத்து  பாதுகாக்கப்படுகிறது.

கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் எடுக்கப்பட்ட படங்களை அடுத்தபதிவில் பாப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக