பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பதிவில் எழுத ஆசை. இது பலருக்கு இந்த நாவலை படிக்க தூண்டுவதோடு மட்டுமல்லாமல் படிப்பதற்கு உதவியாகவும் இருக்கும்.முதலில் கதையின் நாயகனாக வல்லவரையன் வந்தியதேவனை பற்றி பார்ப்போம்.
பழந்தமிழகத்தில் ஒருகாலத்தில் சேர, சோழ , பாண்டிய மன்னர்களை அடக்கி ஆண்ட வாணர் குலத்தில் பிறந்தவன் வந்தியத்தேவன். அப்படிப்பட்ட புகழ்மிக்க குலத்தில் பிறந்திருந்தாலும் இப்போது அவர்களுக்கு என்று சொந்தமாக ஒரு சிறு ஊர் கூட கிடையாது. மேலும் வந்தியதேவனுக்கு பெற்றோர்களோ அல்லது உறவினர்களோ இல்லாத அனாதையாக இருக்கிறான்.அவனுடைய நோக்கமே எப்படியாவது அடுத்து பட்டத்திற்கு வரவிருக்கும் ஆதித்த கரிகாலனின் அபிமானத்தை பெற்று சோழ அரசில் மிகப்பெரிய பதவியை அடைந்து தன் வம்சத்தின் புகழை மீண்டும் நிலை நாட்ட வேண்டும் என்பதாகும். அதற்கு தகுந்தாற்போல் ஆதித்த கரிகாலனின் நண்பனாகி அவனுடைய அந்தரங்க செய்தியை தந்தை சுந்தர சோழருக்கும் , தங்கை குந்தவிக்கும் கொண்டு செல்கிறான்.ஆனால் செல்லும் வழியில் நாட்டில் அமைதியை குலைத்து ஆட்சியை கைப்பற்ற ஒருபுறமும் , பாண்டியனின் மரணத்திற்கு பழிவாங்க ஆதித்த கரிகாலனையும் , அருள்மொழி வர்மனையும் கொல்ல மறுபுறமும் நடக்கும் சதியை கண்டு அதை எப்படியாவது தடுக்க எண்ணுகிறான்.
குந்தவியின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி அவளின் திட்டப்படி இருவரையும் எப்படியாவது காப்பாற்றி அவர்களின் சதியை முறியடிக்கும் பொருட்டு முதலில் அருள்மொழி வர்மன் இருக்கும் இலங்கைக்கு செல்கிறான்.அங்கு அவரை சந்தித்து உண்மைநிலையை விளக்கி அவரை சோழநாடு கொண்டுவருகிறான். உடல்நலமில்லாமல் இருக்கும் அருள்மொழி வர்மனை பாதுகாப்பான இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கிறான். இதற்கிடையில் மக்கள் செய்தி அறிந்து அருள்மொழிவர்மனை அடைந்து அவரை ஊர்வலமாக அழைத்து கொண்டு சோழ தலைநகர் நோக்கி செல்கின்றனர்.
இதற்கிடையில் ஆதித்த கரிகாலனை சதித்திட்டத்தில் இருந்து காப்பாற்ற தொண்டை மண்டலம் நோக்கி செல்கிறான் வந்திய தேவன் ஆனால் அவன் முயற்சி தோல்வியடைந்து ஆதித்த கரிகாலன் பாண்டியன் ஆபத்துதவிகளாலும், நந்தினி என்னும் பாண்டியனின் முன்னாள் காதலியாலும் படுகொலை செய்யப்படுகின்றான்.இதற்கிடையில் பழுவேட்டரைகள் அருள்மொழிவர்மனின் சித்தப்பாவிற்கு முடி சூட சத்திதிட்டம் செய்கிறார்கள் என்பதை அறிந்து நாட்டில் குழப்பம் ஏற்படுகிறது.அதை எல்லாம் அருள்மொழி வர்மன் களைந்து நாட்டில் அமைதி ஏற்படுத்த வந்தியத்தேவன் உதவி செய்கிறான்.
இறுதில் வந்தியத்தேவன் குந்தவியை மணந்து கொள்கிறான். சோழ அரசனாக அருள்மொழி வர்மனின் சித்தப்பா முடி சூடி கொள்கிறார்.